பஞ்சாப் முதலமைச்சர் ராஜினாமா

பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

முன்னதாக அமரீந்தர் சிங்கின் மகன் ரனீன்ந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நானும் எனது தந்தையும் ராஜ்பவன் செல்கிறோம். அப்பா பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இனி எங்கள் குடும்பத்தின் தலைவராக எங்களை வழிநடத்துவார் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று முற்பகலில் அமரீந்தர் சிங் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இதனால், அமரீந்தர் ராஜினாமா செய்யலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் பஞ்சாப் மாநில எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மக்கள் செல்வாக்கைப் பெற்ற அமரீந்தர் சிங் ராஜினாமா வரவிருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். இதனால், அங்கு முன் கூட்டிய தேர்தல் அறிவிக்கப்படுமா? அல்லது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற சுனில் ஜாக்கர் பஞ்சாப் முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் பலரும் நவ்ஜோத் சிங் சித்துவின் அரசியலாலேயே பஞ்சாப் காங்கிரஸில் இத்தனை குழப்பமும் என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே