திருப்பூர் : வீதியில் சுற்றிய இளைஞர்களுக்கு மரண பீதியைக் காட்டிய போலீசார்! (VIDEO)

கொரோனா வேணுமா என்று ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய இளைஞர்களை ஆம்புலன்சில் ஏற்றி மரண பீதியை காண்பித்துள்ளனர் பல்லடம் போலீசார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு வரும் மே 3ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் உத்தரவையும் மீறி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பலரும் வலம் வந்தபடி உள்ளனர்.

இதை அடுத்து காவல் துறையினர் மூலம் தேவையின்றி ஊர் சுற்றும் அவர்களை பிடித்து கைது செய்வதும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருந்தபோதும் அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீசார் அவசர அவசியமின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களை தடுக்கும் விதமாக நூதன உத்தியை கையாண்டு வருகின்றனர்.

பல்லடம் டிஎஸ்பி முருகவேல் உத்தரவின்பேரில் ஆய்வாளர் சுஜாதா போக்குவரத்து உதவி ஆய்வாளர் அன்பு ஆகியோர் தலைமையில் நகரின் மையப் பகுதியாக விளங்கும் நால் ரோடு சந்திப்பில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை தயாராக நிறுத்தி இருந்தனர்.

அந்த ஆம்புலன்சில் கொரோனா வைரஸ் தாக்கிய நபர் போல உடையணிந்த ஒரு நபரையும் இருக்கையில் அமர வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பல்லடம் நான்கு வழி சாலையில் சுற்றித் திரிந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் காரணமின்றி அந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் நகரை வலம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட வாலிபர்களை வரிசையாக ஆம்புலன்சில் போலீசார் ஏற்றினர்.

ஆம்புலன்சில் உள்ளே ஏற்றப்பட்ட வாலிபர்களுக்கு உள்ளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போல் உடையணிந்த நபரை காண்பித்து அவருடன் கோவை சென்று இரத்தப் பரிசோதனை செய்து அதில் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் ஊருக்கு திரும்ப முடியுமென போலீசார் தெரிவித்தனர்.

அப்போது உள்ளே இருந்த நபர் கொரோனா வேணுமா ஜீ என கேட்க இதைக் கேட்ட வாலிபர்கள் அலறி அடித்து கூக்குரலிட்டு என்னை விட்டு விடுங்கள் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறினர்.

ஆனாலும் போலீசார் அதை காதில் வாங்காமல் பிடிபட்ட இளைஞகளை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட இளைஞர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் ஜன்னலை திறந்து வெளியே எட்டி குதித்து ஆளை விட்டால் போதுமடா சாமி எனக்கு கதறியபடியே தப்பி ஓட முயற்சி செய்தனர்.

மேலும் இனிமேல் உயிரே போனாலும் சத்தியமாக சாலையில் தேவையின்றி சுத்த மாட்டோம் என போலீசாரிடம் அந்த இளைஞர்கள் உறுதியளித்தனர்.

144 தடை உத்தரவை அடுத்து மத்திய மாநில அரசுகள் வழங்கிய அறிவுரையை மதிக்காமல் காரணமின்றி சாலைகளில் சுற்றுபவர்களுக்கு பல்லடம் போலீசார் மரண பீதியை காண்பிக்கும் விதமாக செட்டப் செய்த இந்த சம்பவமானது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே