கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது.

கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம்தான் இந்தத் தடுப்பூசியையும் தயாரிக்கிறது. இதற்கான விலை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் 200 – 400 ரூபாய் வரை இருக்கலாம் என சீரம் நிறுவனத்தின் செயல் அலுவலர் அதார் பூனவாலா தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் டவுட் – கர்ப்பப்பை!

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதானமானதாக இருக்கின்றன. இவற்றுள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) வருமுன் காப்பது எளிதானது என்பதோடு, தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்கள் தங்களை எவ்விதம் தற்காத்துக் கொள்வது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினியிடம் கேட்டோம்…

“உலக அளவில் அதிக பேர் பாதிக்கப்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 4வது இடத்தில் இருக்கிறது. எனவே, பெண்கள் அனைவருக்கும் இப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. கர்ப்பப்பை புற்றுநோய் (uterus cancer) வேறு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வேறு. கர்ப்பப்பை வாயின் உள் அடுக்கும், வெளி அடுக்கும் சந்திக்கும் இடத்தை Transformation zone என்று குறிப்பிடுகிறோம். அப்பகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்றின் விளைவாகத்தான் இப்புற்றுநோய் ஏற்படுகிறது. Human papillomavirus (hpv) என்கிற பால்வினைத் தொற்றுதான் இப்புற்றுநோய்க்கு மூல காரணியாக இருக்கிறது. 150 விதமான Human papillomavirus இருக்கின்றன. அவற்றுள் Hpv 14 மற்றும் Hpv 18 ஆகிய வைரஸ்கள்தான் இப்புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இந்த இரு வகையான வைரஸ்களில் மட்டும் அவற்றைச் சுற்றித் தடுப்புச்சுவர் இருக்காது. இதன் காரணமாக அவை எளிதாக கர்ப்பப்பை வாயில் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. பாலியல் செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே இத்தொற்று ஏற்பட்டு அது 10 – 15 ஆண்டுகளில் புற்றுநோயாக மாறுகிறது. எனவேதான், 40 வயதைக் கடந்த பெண்களே அதிக அளவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பிரசவிப்பவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறவர்களுக்கும் இப்புற்றுநோய்க்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறிகுறிகள்

Human papillomavirus தொற்றுக்கு ஆளான பிறகு, பிறப்புறுப்பின் உட்பகுதியில் மரு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் மரு அல்லது கொப்புளங்களை சாதாரணமாக எண்ணிவிடாமல் உடனே அதற்கான சிகிச்சையில் இறங்க வேண்டும். முறை தவறிய மாதவிடாய் (Irregular periods), உடலுறவுக்குப் பிறகு பிறப்பிறுப்பிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல் ஆகியவையும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். அதே போல், மெனோபாஸ் வந்த பிறகும் உதிரப்போக்கு இருக்கிறதென்றால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். வெள்ளைப்படுதலை பெரும்பாலான பெண்கள் பொருட்படுத்துவதில்லை. அதிகப்படியான வெள்ளைப்படுதலும் இப்புற்றுநோய்க்கான அறிகுறி என்பதால் அதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும். புற்றுநோய்களிலேயே கண்ணால் பார்த்துக் கண்டறியக்கூடிய புற்றுநோய் இதுதான்.

தற்காப்பு நடவடிக்கைகள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக இருக்கும் Human papillomavirus தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இருக்கிறது. ஆண் – பெண் இருபாலினருக்குமே இத்தடுப்பூசி செலுத்தப் படுகிறது. 3 டோஸ்களாக இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இப்படியொரு தடுப்பூசி இருக்கிறது என்பது குறித்த தகவலே பலருக்கும் தெரிவதில்லை. 3 டோஸ்களுக்கும் சேர்த்து 5,000 – 6,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள இது ஒன்றும் பெரிய தொகை இல்லை என்பதால் அனைவரும் திருமணத்துக்கு முன்பே இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்வது அவசியம். 9 வயது முதல் 26 வயதுள்ள பெண்களுக்கு இத்தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறோம். தொடர்ச்சியான பாலியல் செயல்பாட்டால் Human papillomavirus தொற்று ஏற்பட்டாலுமே கூட தடுப்பூசி வழியே அதற்கான எதிர்ப்புசக்தி உட்செலுத்தப்படும்போது அது புற்றுநோயாக மாறாது.

சிகிச்சை முறை

Human papillomavirus (HPV) என்பது human immuno virus (HIV) ஐ விட மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுகிறவர்களுக்கு கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களை எடுத்து பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை மேற்கொள்வோம். அப்பரிசோதனையிலேயே புற்றுநோய் இருப்பதை உறுதி செய்துவிட முடியும். எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சையில் நல்ல பலனைப் பெற முடியும். கர்ப்பப்பை காப்போம்!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பொறுத்தவரை முதல் இரு நிலைகளில் இருக்கும்போது கண்டறிந்துவிட்டால் கர்ப்பப்பை வாயில் மட்டுமே புற்றுநோய் பரவியிருக்கும் என்பதால் கர்ப்பப்பையை நீக்கிவிடலாம். பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் கர்ப்பப்பை தேவைப்படாது. மிகவும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் கதிர்வீச்சின் மூலம் புற்றுநோய் செல்களை மட்டும் அழித்துவிடலாம். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் பெண்கள் அனைவரும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டாலே போதும்” என்கிறார் நந்தினி.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பபை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளனவா என்றும் இப்புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virus-க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்றும் அரசு பெண்கள்நல சிறப்பு மருத்துவர் இர்ஃபானாவிடம் கேட்டோம்…

“கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virus-க்கு இந்தியாவில் Cervarix, Gardanil ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில்தான் செலுத்தப்பட்டு வருகின்றன. கர்ப்பப்பை

இப்புற்றுநோயைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. பிறப்புறுப்புப் பகுதியில் இப்புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் பாப் ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கும் அடுத்தகட்டமாக கால்போஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளும்போது இன்னும் துல்லியமாக புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும். கண்ணால் பார்ப்பதைவிட கால்போஸ்கோபி மூலமாக பார்க்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்குப் பிறகு, பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

கர்ப்பப்பை வாயில் மரு, புண் ஏதுமில்லாமல் நன்றாக இருக்கிறதென்றால் கால்போஸ்கோபி பரிசோதனை தேவைப்படாது. பாப் ஸ்மியர் பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படும். பார்த்தாலே புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிகிற நிலையில் பாப் ஸ்மியர் பரிசோதனை தேவையில்லை. கால்போஸ்கோபி மூலம் பரிசோதனை செய்துவிட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படும். புற்றுநோய் உறுதி செய்யப்படும் நிலையில் அதற்கான கதிர்வீச்சு சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன” என்கிறார் இர்ஃபானா.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லியில் 2016-ம் ஆண்டிலிருந்து HPV-க்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனை களில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து 2017, 2018-ம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் இத்தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட ஆரம்பித்தன. இந்நிலையில், பொது மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிலும் இத்தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே