மின் கட்டணம் செலுத்த அவகாசம்: வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கக் கோரி ‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “கடந்த மார்ச் மாதம், 1.34 கோடி நுகர்வோரில் 8.45 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தவில்லை. 343 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. 

6.25% பேர் மட்டுமே செலுத்தவில்லை. 93.75% பேர் செலுத்தி விட்டனர்.

அதேபோல, ஏப்ரல் மாதம், 90.5% பேர் செலுத்தியுள்ளனர். 287 கோடியே 94 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.

மே மாதம் 86.38% பேர் மின் கட்டணம் செலுத்தி விட்டனர். 478 கோடியே 36 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், பெரும்பான்மையினர் மின் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஊரடங்கில் இணைப்பைத் துண்டிக்கவில்லை எனவும், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரருக்கு எந்தக் குறையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஏற்கெனவே 90 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்தி விட்டதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே