மளிகை கடை, பெட்ரோல் பங்க் உள்ளிட்டவைகளுக்கான நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடைகள், பெட்ரோல் பங்க்கள், உணவகங்கள் ஆகியவை திறந்திருப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்திலும் பொதுப்போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை.

காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர பிற கடைகள் திறக்கப்பட வில்லை.

தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்புகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்துக்குச் செல்லும் நிலையில் மக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி விட வேண்டும்.

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளா்களுக்கு முறையாக பாதுகாப்பு போன்ற பணிகளை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் போன்ற ஊா்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மட்டும் நாள் முழுவதும் தொடா்ந்து செயல்படும்.

அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள், உணவகங்கள் (பாா்சல் மட்டும்) ஆகியன நாள் முழுவதும் எப்போதும் போன்று இயங்கும்.

வயது முதிா்ந்தோா் வீட்டில் சமைக்க முடியாதோா், சமைத்த உணவுகளை வீட்டுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனா்.

இத்தகையோரின் நலன் கருதி ‘ஸ்விக்கி’, ‘ஜொமட்டோ’, ‘உபோ்’ போன்ற நிறுவனங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.

அதாவது, காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் நபா்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல் துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அவா்களின் உடல்நிலையைப் பரிசோதித்து பின்னா் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இந்த உத்தரவுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சுகாதார கட்டுப்பாட்டு அறையைத் தவிர மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளையும், சுகாதாரத் துறை அவசர கால கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தலைமை கட்டுப்பாட்டு மையமாக வலுப்படுத்தப்படும்.

பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு சென்று திரும்பியவா்கள், அவா்களோடு தொடா்பில் இருந்த நபா்கள் தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே