ஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் உட்பட 58 சீனச் செயலிகளை இந்தியா தடை செய்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம், டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்தது.

இதனையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில், திடீரென ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க, பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. 

இதனால், மைக்ரோசாப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே டிக் டாக்கை வாங்கக்கூடிய போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது.

இந்த விற்பனையின் மூலம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளும் ஆரக்கிள் நிறுவனத்துக்குச் செல்லுமா என்பது பற்றிய தெளிவு இன்னும் தரப்படவில்லை.

மேலும் இது ஒட்டுமொத்த விற்பனை போல அல்ல என்றும், அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டுக்கு, தங்களது க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆரக்கிள் உதவும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை மைக்ரோசாப்டுக்கு விற்க மாட்டோம் என பைட் டான்ஸ் நிறுவனம் எங்களிடம் தெரிவித்துள்ளது.

எங்கள் முன்னெடுப்பு தேசிய நலன் மற்றும் பாதுகாப்பைப் பேணும் அதே நேரத்தில் டிக் டாக் பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

உயர்தரப் பாதுகாப்பு, தனியுரிமை, இணையப் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ளுதல் ஆகிய விஷயங்களில் உச்சபட்ச தரத்தைப் பேண வேண்டும் என்று, இதற்காகவே நாங்கள் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தோம். இதை எங்களது ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே