ஔவையார், பாரதியார் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர்..!!

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார். வழக்கமாகத் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி இன்று ஔவையார், பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி கைதட்டலை அள்ளினார்.

பிரதமர் மோடி தமிழ்க் கவிதைகளை, திருக்குறளை, பாரதியார் கவிதைகளைப் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்.

வெளிநாடுகளில் பங்கேற்ற நிகழ்வுகளிலும் அவர் தமிழ் மொழியின் செம்மை குறித்துப் பேசி திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். வழக்கமாக இல்லாத அளவுக்கு அவருக்கு அதிக அளவில் சாலையில் திரண்டு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். 

விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் மோடி பட்டுச்சட்டையில் வந்திருந்தார்.

நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது ரூ.2,640 கோடி செலவில் கல்லணை வாய்க்காலைப் புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

அப்போது ஔவையாரின் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார். ஔவையார் விவசாயம் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிட்டு எழுதியுள்ள

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்-

என்கிற வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அரங்கில் உள்ளவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்ற பொருளில் ஒளவையார் எழுதிய பாடலை சரியான நேரத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, அடுத்து பாரதியார் கவிதையையும் மேற்கோள் காட்டினார்.

ஆவடி டாங்க் ஆலையில் உருவான அர்ஜுனா டாங்க் பற்றிக் கூறும்போது பாரதி எழுதிய வரிகளை குறிப்பிட்டார்.

பாரதியின் கவிதையான

ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம்; உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம்; இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

என்கிற வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே