மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே..! – கமல்ஹாசன் ட்வீட்

நாமக்கல்லில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்ததைச் சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

நாமக்கல் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இன்று காலையில் இடிந்து விழுந்தது. நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் தனியார் கட்டுமான நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

45 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் தளம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

கட்டிடத்தின் நுழைவு வாயில் முகப்பு கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை போர்டிகோ இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் முடியும் முன்னரே இடிந்து விழுந்ததால் அதன் கட்டுமானம் குறித்துப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும்போதே உடைந்து போயிருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

‘நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.

உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும்போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே’.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே