நாமக்கல் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்த இளைஞர், பத்து மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன் சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவர் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில் நின்றுகொண்டு நேற்று இரவு தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் நீண்ட நேரமாக அவர் கூச்சலிட்டும் யாருக்கும் இவரது அலரல் சத்தம் கேட்கவில்லை. இதனால், நேற்று இரவு முதல் காலை வரை சுமார் 10 மணி நேரம் கிணற்றுக்குள் தத்தளித்தவாரே இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கிணற்றில் இருந்து அலரல் சத்தம் வருவதை கேட்ட அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் அஷிக் தத்தளிப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டனர்.
அவரை பரிசோதித்ததில் கிணற்றில் விழுந்ததில் அவரின் கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.செல்போனில் காதலியுடன் பேச்சு சுவாரசியத்தில் கிணற்றில் விழுந்த இளைஞர்