பஞ்சாப்பின் முதலமைச்சர் பொறுப்புக்கு ‘சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா’ பெயரை பரிந்துரைத்தது காங்கிரஸ்..!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நவ்ஜோத்சிங் சித்துவை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமரீந்தர்சிங் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் நேற்று ராஜினாமா செய்தார். மேலும் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் பஞ்சாப் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரை அவர்களது சாய்ஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி. நேருவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக அம்பிகா சோனியின் தந்தை இருந்தார். இந்திரா காந்தியால் 1969-ல் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் அம்பிகா சோனி.

முதல்வர் பதவியை நிராகரித்த அம்பிகா சோனி

ஆனால் தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை அம்பிகா சோனி ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக வேண்டும். எனக்கு பஞ்சாப் மாநிலத்துடன் ஆழமான தொடர்பு இருந்தாலும் சீக்கியர் ஒருவருக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும். அதனால் முதல்வர் பதவியை வேண்டாம் என நிராகரித்துவிட்டேன் என்றார்.

புதிய முதல்வராகும் சுக்ஜிந்தர் ரந்தாவா

இதனைத் தொடர்ந்து சண்டிகரில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிய முதல்வர் குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைகளில் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா, புதிய முதல்வராக பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் வியூகம்- 2 துணை முதல்வர்கள்

அமரீந்தர்சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தவர்தான் சுக்ஜிந்தர் ரந்தாவா. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை அமரீந்தர்சிங் நிறைவேற்றவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் அமரீந்தர்சிங் மீது அதிருப்தியை காட்டினார் சுக்ஜிந்தர். மேலும் 2 துணை முதல்வர்களை நியமிக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். தலித் ஒருவருக்கும் தலித் அல்லாத இந்து ஒருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் தரப்பட உள்ளனவாம். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அனைத்து சமூகத்தினரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே