கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக செல்லும் கேரள அரசு பேருந்துகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அங்கிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. எனினும் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தென்காசியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வந்தவாசி பேருந்து நிலைய பகுதி, கடைவீதி ஆகிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள் வழக்கம்போல் ஓடுவதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.
தமிழக அரசு பேருந்துகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
திரையரங்குகளில் காலை, பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.