சாத்தான்குளத்தில் உயிரிழந்த விசாரணைக் கைதிகளின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி – மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த விசாரணைக் கைதிகளின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்த உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் உயிரிழந்த விசாரணைக் கைதிகளின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட – துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன் – மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணி அவர்களுக்குக் திமுக சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே