பாராசிட்டமால் மருந்தின் கதை

நம் ஊர் பக்கங்களில் தலைவலி, காய்ச்சல், சளி தொல்லை மாதிரியான உடல் உபாதைகளுக்கு அனைவரும் கைவைத்திய நிவாரணியாக பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்வது வழக்கம். இத்தகைய சூழலில் ‘மருந்து கடைகளில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடையை நீக்க வேண்டும்’ என மதுரை வாசுகி நகரை சேர்ந்த ஜோயல் சுகுமார் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார். அப்போது ‘பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு தடையேதும் பிறப்பிக்கவில்லை. அந்த மாத்திரை தங்குதடையின்றி மக்களுக்கு கிடைத்து வருகிறது’ என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அலோபதி என சொல்லப்படும் ஆங்கில மருத்துவ முறையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசிய மருந்துகளில் பாராசிட்டமாலுக்கு முதலிடம். உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்தும் இது தான். இந்த நொடி கூட உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் இருப்பவர்கள் பாராசிட்டமலை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

Dr. வெங்கடாச்சலம்

“வைரஸ், பாக்டீரியா மாதிரியான நோய் கிருமிகள் ஏதாவது ஒன்று உடலில் உள்ள செல்களை தாக்கும் போது நம் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. இப்படி காய்ச்சலோடு தொடங்கும் நோய்கள், உடல் வலி, தலை வலிக்கு மருத்துவர்கள் முதலில் பாராசிட்டமல் மருந்தை முதலில் மாத்திரையாகவும், அதன் பிறகு ஊசியாகவும் உடலுக்குள் செலுத்தி குணப்படுத்துவார்கள். சமயங்களில் காய்ச்சலை முதற்கட்டமாக குறைக்கவும் பயன்படுத்துவார்கள். அதன் பிறகு தான் பரிசோதனை மூலமாக காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். உடல் வெப்பத்தை சராசரி அளவுக்கு கொண்டு வர பாராசிட்டமால் அதிமருந்தாக பயன்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். அந்தளவிற்கு இது பாதுகாப்பான மருந்து. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு டோஸ் மட்டுமே இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம்” என்கிறார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியரும், மருத்துவருமான வெங்கடாச்சலம்.

எப்போது உருவானது?

1877ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த வேதியியல் விஞ்ஞானி ஹார்மன் நார்த்ரோப் மோர்ஸ் தான் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது பாராசிட்டமாலை கண்டறிந்துள்ளார். இருந்தாலும் ‘கிளினிக்கல் டிரையல்’ என சொல்லப்படும் மருத்துவ ஆரய்ச்சிகளுக்கு அதை உட்படுத்தாமல் இருந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு மருந்து ஆராய்ச்சியாளரான ஜோசப் வோன் மெரிங் மனித உடலில் பாராசிட்டமால் மருந்தை ஆய்வுகளுக்கு உட்படுத்தி உள்ளார். இப்படி படிப்படியாக பல ஆய்வு பணிகள் அரை நூற்றாண்டு வரை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

1949இல் பெர்னார்ட் புரூடி, ஜூலியஸ் ஆக்சிலிராட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பாராசிட்டமலை பயன்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டனர். அதன் பின்னர் தான் பாராசிட்டமால் மாத்திரை சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1950இல் அமெரிக்காவில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்ரிக்கா என அனைத்து கண்டங்களுக்கு பாராசிட்டமால் மருந்தின் பயன்பாடு படர்ந்துள்ளது.

பாராசிட்டமால் மருந்துக்கு மூல பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை

உலக பொது சுகாதாரம் மையம் வெளியிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலிலும் பாராசிட்டமால் இடம் பிடித்துள்ளது.

‘பாராசிட்டாமல் பயன்படுத்துவதனால் பக்க விளைவுகள் பெரிதும் இருக்காது. இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் பாராசிட்டமாலும் நஞ்சாகலாம்’ என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பாராசிட்டமால் மருந்தை பற்றி பிற தளங்களில் வெளியான கட்டுரைகள் :

Wikipedia.org

Ncbi.nlm.nih.gov

Academic.oup.com

Jpsmjournal.com


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே