சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோ அல்ல – சென்னை காவல்துறை விளக்கம்

சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.

காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸை போலீசார் தாக்கும் வீடியோ என்று போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போலீசார், சாத்தான்குளம் சம்பவம் என்று சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ 2019-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ என்பதும், அது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

எனவே, மேற்படி வீடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் சம்மந்தப்படுத்தி விஷமிகள் சமூக வலைதளங்களில் தவறானதகவல்களை பரப்பி வருவது விசாரணையில் தெரிய வருகிறது.

இந்த வீடியோவை பதிவிட்டவர்களை கண்டுபிடித்து தக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள புலன் விசாரணை நடது வருகிறது.

இதுபோல தவறான தகவல்களை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே