அழிவின் பாதையில் வெள்ளிக் கொலுசு தொழில்

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் ஆர்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். என்ன காரணம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சேலம் மாங்கனியை போலவே சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிக் கொலுசுகளுக்கும் தனி சிறப்பு உண்டு.

தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் சேலம் வெள்ளி கொலுசுகள் என்றால் கொள்ளை பிரியம்.

ஆத்தூர், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானபட்டி, குகை என சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளி கொலுசு உற்பத்தி மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஐந்து லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

குஷ்பூ ஜால்ரா பின்னல், குஷ்பூ வர்ஷா சலங்கை, பின்னல் ஜால்ரா என பல்வேறு ரகங்களில் கிடைக்கும் இந்த கொலுசுகள், 25 கிராம் எடையில் இருந்து 250 கிராம் எடை வரை தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த வெள்ளிக்கொலுசு துறை இன்று சரிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

வெள்ளியின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பதே தங்களது தொழில் நலிவடைவதற்கு காரணம் என்று கூறும் கொலுசு உற்பத்தியாளர்கள், இதனால் தீபாவளி பண்டிகைக்கு கூட ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்புக்கு பிறகு மெல்ல மெல்ல நலிவடைந்து வந்த கொலுசு உற்பத்தி, தற்போது பொருளாதார மந்த நிலையால் மேலும் வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக இயக்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

சேலத்தின் பாரம்பரிய தொழிலான வெள்ளிக்கொலுசு உற்பத்தியை அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே