தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பிளஸ் டூ மார்க் 595 மட்டுமே; அதிர்ச்சி தகவல்

தர்மபுரியில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன், 2018 ஆம் ஆண்டு நடந்த பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 595 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வுக்கு அஞ்சி அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி மற்றும் மதுரை மாணவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையில் சில முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன், ஜெய சித்ரா தம்பதியின் ஒரே மகனான மாணவர் ஆதித்யா தேர்வுக்கு முந்தைய நாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவன் தற்கொலைக்கு நீட் தேர்வுதான் காரணம் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு ஒரு பக்கம் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாணவன் ஆதித்யா 12 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே சுமாராக படிக்க கூடிய மாணவர் என்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 1200 க்கு 595 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் கல்லூரியில் நல்ல குரூப் கிடைக்காத நிலையில், 720 மதிப்பெண்ணுக்கு நடக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நேரடியாக மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற ஆசையில் ஆதித்யாவை அவரது தந்தை நீட் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

3 முறை நீட் தேர்வு எழுதலாம் என்ற விதி இருப்பதால் மாணவர் ஆதித்யாவின் தந்தை மணிவண்ணன், கடன் பெற்று தனது மகனை நீட் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

முதலில் தேர்வு எழுதிய போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆதித்யாவை மீண்டும் நீட் தேர்வு எழுத பணம் கட்டி பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளார்.

தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்ட தேர்விலேயே 12 ஆம் வகுப்பில் 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர் ஆதித்யாவால் சி.பி.எஸ்.இ பாடத்தின்படி நடத்தப்படும் நீட் பயிற்சியில் பாடங்களை புரிந்து கொள்ள இயலாமலும், தந்தையின் ஆசையையும் நிறைவேற்ற இயலாது என்ற அச்சத்தாலும் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதே போல மதுரையில் நீட் தேர்வுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி ஜோதி துர்கா. தனது இறுதி கடிதத்தில் தனது தந்தையிடம் நிறைய பேச வேண்டும் என்றும் அதற்கான நேரம் இப்போது இல்லை என்றும் தன் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கும் தந்தை நினைத்தபடி தனக்கு கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதால் சோர்ந்து போய் விட்டதாகவும் கூறி தற்கொலை முடிவை தேடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கே பல பெற்றோர்களுக்கு தங்களால் முடியாததை தங்கள் பிள்ளைகளால் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதில் தவறில்லை அதே வேளையில் நமது லட்சியத்தை அடையும் வகையில் தங்கள் பிள்ளைகளை தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வளர்த்திருக்கிறோமா ? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

கல்வியை போதிப்பதில் காட்டும் அதே அக்கறையில் தங்கள் பிள்ளைகளுடன் அமர்ந்து மனம் விட்டு பேசி தன்னம்பிக்கையையும் , விடாமுயற்சியையும் கற்றுக் கொடுங்கள் சமூகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் சொல்லிக் கொடுங்கள் எத்தகைய சவால்களையும் எளிதாக கடந்து செல்வதற்கு வழி சொல்லுங்கள்.

தங்களின் ஈடேராத பேராசைகளை பிள்ளைகளின் தலையில் திணிக்காதீர்கள்.

அவர்களுக்கு புத்தி சொல்வதாக நினைத்து மன உளைச்சளுக்கு ஆளாக்காதீர்கள் என்று அறிவுறுத்தும் மனோ தந்துவ நிபுணர்கள்,

தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையே போய்விட்டது என்று எரிந்து விழாதீர்கள், கனிவுடன் பேசி அறுதல் சொல்லுங்கள் என்றும் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லும் அதே நேரத்தில் தோல்வி முடிவல்ல அடுத்த பயணத்தின் தொடக்கம் என்று நம்பிக்கையூட்டுங்கள் என்கின்றனர்.

படிப்பில் அத்தனை மீதும் ஆசை கொள்வோம்..! அதில் எது கிடைத்தாலும் மகிழ்ச்சி கொள்வோம்..! கடமையை செய்தால் பலன் தானாக வந்து சேரும்..!

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே