பிராமண முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமிய இளைஞர்…

இறந்து போன பிராமணருக்கு, முஸ்லிம் ஒருவர், இந்துமுறைப்படி சடங்குகள் செய்து, கொள்ளியும் வைத்துள்ளார்.. அந்த நல்ல இதயத்துக்கு சொந்தமான முகம்மது ஆசிப் என்பவரை பற்றிதான் இந்த செய்தி!

இந்த கொரோனா பல பாடங்களை உலகுக்கு கற்று தந்து வருகிறது.. யார் யார் எப்படி என்பதையும், மனிதாபிமானம் எந்த அளவுக்கு மலிந்துவிட்டது என்பதையும் நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஒருவர் தொற்று பாதித்து இறந்துவிட்டால், கட்டின மனைவியும், குழந்தைகளும் அவரை தொட்டுக்கூட அழ முடியாத துர்பாக்கிய நிலை இருந்தும், அதை யாரும் உணர்வதாகவும் தெரியவில்லை.

இதற்கு நடுவில், “மனிதம்” மலர்ந்தும் வருகிறது… இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகியும் வருவதையும் கண்டு வருகிறோம்.

அப்படி ஒரு சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது..

மூத்பிட்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்.. 62 வயதாகிறது.. இவருக்கு சொந்தங்கள் இருந்தும் யாரும் சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது..

அதனால், ஒரு அனாதை இல்லத்தில் வந்து தங்கிவிட்டார். இந்நிலையில், அவருக்கு அங்கு கொரோனா தொற்று பாதித்தது.. கடந்த சில நாட்களாகவே உடம்பு ரொம்ப மோசமாகியும் விட்டது.

எப்படியும் தனக்கு மரணம் என்பதை வேணுகோபால் உணர்ந்து கொண்டார்.. அதனால், சாகிறதுக்கு முன்னாடி, கடைசியாக எல்லால சொந்தக்காரர்களையும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்…

ஆனால், வேணுகோபாலுக்கு தொற்று இருப்பதால், அவரை சந்திக்க யாருக்குமே இஷ்டம் இல்லை.. அதனால் தானாக வலிய வந்தும், அவரை சந்திக்க மறுத்துவிட்டனர்.

இதுவரை அனாதையாக வாழந்ததைவிட வேணுகோபால் இப்போதுதான் அதிகமாக மனம் நொந்தார்.. அழுது தீர்த்தார்..

உலகம் இவ்வளவு கொடியதா என்று வெம்பி கதறினார்.. தன்னுடைய கடைசி ஆசை நிறைவேறாமலேயே வேணுகோபால் இறந்தும்விட்டார்…

இப்போது அடுத்த கொடுமை ஆரம்பமானது.. முகத்தையே பார்க்க விரும்பாதவர்கள், அவரது சடலத்தை மட்டும் வாங்க எப்படி முன்வருவார்கள்? அதனால் வேணுகோபாலை யார் புதைப்பது என்ற கேள்வி எழுந்தது.

அப்போதுதான் முகமது ஆசிப் என்பவர் முன்வந்தார்.. இவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.. அனாதையாக கிடந்த பிணத்தை பார்த்து ஆசிப்புக்கு மனசு கேட்கவில்லை.. அதனால் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றார்..

வேணுகோபாலை முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டார்.. அதன்படியே போலீசாரும் அனுமதி தரவும், தன் நண்பர்களை எல்லாம் ஆசிப் வரவழைத்தார்.

வேணுகோபால் ஒரு பிராமணர்.. அதனால் இந்து முறைப்படியே அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, கொள்ளியும் வைத்தனர்..

ஆசிப் எப்பவுமே இப்படிதானாம்.. நல்ல உதவும் உள்ளவர்.. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறாராம்..

ஒரு டிரைவராக இருந்தாலும், இந்த அறக்கட்டளையை முடிந்தவரை திறன்பட நடத்தி வருகிறார்.

இப்படி இந்த கொரோனா ஒவ்வொருவரின் நல்லது, கெட்டதுகளை அப்பட்டமாக வெளி காட்டி வருகிறது.. கடைசிவரை துயரத்திலும், ஏமாற்றத்திலும் உயிரிழந்த வேணுகோபால், தன் வாழ்நாளில் ஆசிப்பை சந்திக்காமல் விட்டுவிட்டார்..

எத்தனை இன்னல்கள் வந்தால் என்ன… முகமது ஆசிப்கள் இருக்கும்வரை அனாதை என்ற வார்த்தை இவ்வுலகில் கிடையாது!

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே