விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் சிறுவன் ஒருவனை வாசலில் நிற்க வைத்து வைத்தியம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்ற சிறுவன் மருத்துவர் அறை உள்ள கட்டிடத்திற்கு வெளியே வாசலில் நிற்க வைக்கப்பட்டான்.
அந்த கட்டிடத்தின் உள்ளே, ஒரு மீட்டருக்கும் அதிக தூரத்தில் டாக்டர் அமர்ந்திருந்தார். அந்த சிறுவனை தூரத்திலேயே நிற்க வைத்து முகத்தில் ‘டார்ச் லைட்’ அடித்து பின்னர் மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்துள்ளார்.
இதுசம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று வந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் மிகவும் உஷாராக இருப்பது முக்கியம்.
அதற்காக இவ்வளவு தூரம் சமூக இடைவெளியை பின்பற்றி சிறுவனுக்கு மருத்துவம் பார்த்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையேயும் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பணியில் இருந்த டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.