முதல்வரான பின்னர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் 3 கோப்புகள்??

தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 125 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனையெடுத்து நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை காலை ஒன்பது மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகம் செல்லும் அவர், முதலமைச்சராக பொறுப்பேற்று, பணிகளை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சராக பணியைத் தொடங்கும் அவர் முதன் முதலாக எந்தெந்த கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான முதல் உத்தரவில் முதலமைச்சரான பின்னர் ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசு உத்தரவிலும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

மூன்றாவதாக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் உத்தரவு, மகளிர் பேறுகால உதவித்தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான உத்தரவு, இந்து ஆலயங்களை சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி, மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஆகியவற்றுக்கான உத்தரவுகளில் ஏதாவது ஒன்றில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்றும் தெரிகிறது.

இதுதவிர வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கன உத்தரவு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் உத்தரவு ஆகியவற்றில் ஏதாவது ஒரு உத்தரவில் மூன்றாவதாக கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே