இன்று முதல் மீண்டும் இயங்க தொடங்கிய திரைத்துறை..!

தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெஃப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ் திரைப்பட பணிகள் 52 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்ற பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழக அரசு விதித்துள்ள முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் இன்று காலை குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகள் துவங்கி உள்ளது.

மேலும் விஷாலின் சக்ரா, த்ரிஷாவின் ராங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் மாஸ்டர், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், பிரபுசாலமன் இயக்கும் கும்கி 2, ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதவிர சில வெப் சீரிஸ்க்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

யாராவது ஒருவர் விதிமுறையை பின்பற்றாவிட்டாலும் கொரோனா தொற்று ஏற்பட நமது உறுப்பினர்கள் யாராவது ஒருவர் காரணமாக இருந்தாலும் நமக்கு அரசால் அளிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் விதிமுறையை பின்பற்றி பணி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பணியின் தன்மை, பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம் பணியாளர்கள் பணிபுரியும் இடம் ஆகிய விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அனைத்து சம்மேளன உறுப்பினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களின் பணியின் விவரம், பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் அனுப்பிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரைப்பட படப்பிடிப்பு அல்லாத பணிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் பெஃப்சி சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே