டெல்லியில் முழு ஊரடங்கு நாளை முதல் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படலாம் என தகவல்..!!

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது.

நாட்டில கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டமாக நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதிவரை ஒருவாரம் லாக்டவுன் அமல்படுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டார்.

ஆனால் கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா தொற்று மிக மோசமான அளவில் இருந்து வருகிறது. பரிசோதனை அளவை குறைத்தபோதிலும் தொற்றின் வேகம் வீரியமாக இருந்துவருகிறது.

அதிலும், ஆக்சிஜன், வென்டிலேட்டர், ஐசியு சிகிச்சைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கட்டுக்குள் வராத கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் லாக்டவுனை நடவடிக்கையை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அதாவது மே 2ம் தேதிவரை வரை நீட்டிக்க டெல்லி அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் இன்று அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘ டெல்லியில் லாக்டவுன் நடவடிக்கையை மேலும் ஒருவாரம் நீட்டித்து அறிவிப்பு இன்று வெளியாகலாம்.இதற்கான அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் இன்று வெளியிடும்.

கரோனா வைரஸ் தொற்றின் வேகம் உச்சகட்டத்தில் இருப்பதாலும், பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிரச்சினை இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த சூழலில், லாக்டவுனை நீக்கினால், டெல்லியில் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், லாக்டவுன் தொடரும்’ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் லாக்டவுனை மேலும் ஒருவாரம் நீட்டிக்க டெல்லி குடியிருப்பு மக்கள் சங்கம், அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

டெல்லியில் மேலும் ஒருவாரம் லாக்டவுன் நீட்டிக்கப்படாவிட்டாலும் மே 2-ம் தேதிவரை கடைகளைத் திறக்கமாட்டோம் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே