நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது – உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரை சேர்ந்த சி.எம்.சி மருத்துவ கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பேனர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது சி.எம்.சி மருத்துவ கல்லூரியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவால், வேலூர் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கை நீங்கள் அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்றனர்.

நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நீதிபதிகள், நீட் தேர்வில் இருந்து ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? என்றனர்.

நீட் தேர்வின் மூலம் தான் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே