குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவன் ரத்த வாந்தி எடுத்ததாக புகார்..!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடையில் குளிர்பானம் வாங்கிக்குடித்த சிறுவனுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவரின் 6 வயது மகன் லக்ஷ்மன் சாய். இவர் அவரது வீட்டிற்கு அருகே உள்ள கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார். குளிர்பானத்தைக் குடித்த சிறுவன் சாய் உடனடியாக மயங்கி விழுந்ததோடு இரத்தவாந்தியும் எடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். தற்போது சிறுவனுக்கு அவரச சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறைக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ், காயத்திரி தம்பதியினரின் இளையமகள் தாரணி வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார். குளிர்பானத்தைச் சிறுமி குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டதோடு மூக்கில் சிவப்பு நிற சளி வந்ததைக் கண்டு சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் தாரணியின் தாய் வந்து பார்ப்பதற்குள் மயங்கி விழுந்த சிறுமியின் உடல் நீல நிறத்தில் மாறியிருக்கிறது. உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோழவரம் அடுத்த ஆத்தூர் பகுதியில் இயங்கி வந்த அந்த தனியார் குளிர்பான ஆலையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அந்த ஆலையை மூடினர். இந்த நிலையில் சென்னையில் மீண்டும் ஒரு சிறுவனுக்குக் குளிர்பானத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே