கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற விவகாரம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

தேனியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த 45 வயது பெண்ணுக்கு கடந்த வாரம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கூடலூர் நகராட்சி சுகாதாரப்பிரிவுககுத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் பெண் வசிக்கும் தெருவில் இருந்தவர்கள் இறந்தவரின் உடலை உடனே எடுத்துச் செல்லுமாறும் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால், அப்பெண்ணின் மகன் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்துவந்து இறந்த தாயின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே