தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கமானது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியதை அடுத்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொதுப்போக்குவரத்து மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டு வந்தது.

மேலும், ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில் சேவையை முழுவதுமாக ரத்து செய்திருந்தது. தொடர்ந்து, தமிழக அரசானது கோரிக்கை விடுத்ததை அடுத்து, பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசானது தெற்கு ரயில்வேக்கு வலியுறுத்தியது.

இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகமும் அதனை ஏற்றுக்கொண்டு ரயில் சேவையை ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரயில் சேவை ரத்து செய்ததை மேலும் நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி திருச்சி – செங்கல்பட்டு, மதுரை –  விழுப்புரம், கோவை – காட்பாடி, செங்கல்பட்டு – திருச்சி, அரக்கோணம் – கோவை, கோவை  – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே