பெண் தீக்குளித்து இறந்த விவகாரம்; வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் கைது

கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழமலைப் பகுதி அருகே உள்ள கே.சி.பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் மாலதி ( 28).

இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே நெருங்கி பழகிய இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் சதீஷ்க்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதனை அறிந்து ஆத்திரமடைந்த மாலதி, தனது குழந்தையுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். 

அதனைத்தொடர்ந்து தனது குழந்தையை அருகே இருந்த டீக்கடையில் அமரச் செய்து விட்டு, சதீஷ் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீக்குளித்ததால் படுகாயம் அடைந்த மாலதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் தற்போது மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்த சரவணக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், சதீஷின் அண்ணன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாலதியை ஏமாற்றிய சதீஷ் மற்றும் வீடியோ எடுத்த சரவணக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே