கொரோனாவால் 9 மாத கர்ப்பிணிப் பெண் பலி; தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 9 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வல்லம் மற்றும் திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் அமைந்துள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை வரை 63,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 835 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சையில் குணமடைந்து 469 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனிக்காமல் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பண்ணைவயல் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய ஆண், 65 வயது நிரம்பிய பெண், 35 வயது நிரம்பிய 9 மாத கர்ப்பிணிப் பெண், துறையுண்டார் கோட்டையைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய ஆண் ஆகிய 4 பேரும் உரிழந்தனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரியில் 4 உடல்களும் வைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உறவினர்கள் பலர் அங்கு அழுதுகொண்டு இருந்தனர். இதனால் அந்த வளாகம் முழுவதுமே சோகத்தில் மூழ்கியது.

9 மாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி உயிரிழந்ததை எண்ணி, அவரின் கணவர் கதறிக் கொண்டிருந்தார். ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவரைத் தேற்ற யாராலும் முடியவில்லை.

ஏற்கெனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்தப் பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கர்ப்பிணி பெண் உயிரிழந்து விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அவரின் கணவர், `என் மனைவியையும், அவள் வயிற்றுக்குள் இருந்த குழந்தையையும் சேர்த்து இரண்டு உயிரைத் தொலைத்து விட்டு நிற்கிறேனே?’ என அருகில் இருந்தவர்களிடம் கண்ணீர் மல்கக் கூறியது அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தது தஞ்சை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே