கல்லூரிகளை செப்டம்பர் மாதம் தொடங்கலாம் – UGC பரிந்துரை

அடுத்த கல்வியாண்டை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) பரிந்துரை செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பொதுவாக ஒவ்வொரு ஜூலை மாதம்தான் கல்வியாண்டைத் தொடங்குவது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாலும், அது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி விடுமுறைகளும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து, 2020-21ஆம் கல்வியாண்டை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என யு.ஜி.சி. பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய 2 யு.ஜி.சி. குழுக்களில் ஒன்று, பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

மற்றொரு யு.ஜி.சி. குழு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் முடிந்தவரை ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.

அல்லது, வழக்கமான பேப்பர்-பேனா தேர்வுகளை ஊரடங்குக்குப் பிறகு நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த 2ஆவது குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரத்திற்குள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும் என்று தெரிகிறது.

மேலும், கொரோனா தாக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்போதைக்கு, இத்தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே