இந்தியாவில் ஒருநாளைக்கு 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி நிவேதிதா குப்தா தெரிவித்ததாவது:
“கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.
ஆண்டிஜென் பரிசோதனை பயன்பாட்டின் மூலம் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்கிறோம்.
கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையுடன் கூடுதலாக ட்ரூநாட் மற்றும் சிபிநாட் பரிசோதனைகளும் சமீபத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தற்போது 1,132 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன” என தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“உலகிலேயே 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. 130 கோடி மக்கள்தொகை கொண்டிருந்தும் இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாகவே கரோனா தொற்றை எதிர்கொண்டுள்ளது.
ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில், இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
உலக சுகாதார அமைப்பின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 538 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதுவே சில நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் 16-17 மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகையில் 15 பேர் பலியாகின்றனர். சில நாடுகளில் இது 40 மடங்கு அதிகமாக உள்ளது.” என தெரிவித்தார்.