கொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் மலை ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

கொரோனா தாக்கத்தின் 2வது அலையால் அதிகரித்து வரும் தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்த போதும் மிகவும் குறைந்த அளவிலே இருந்தனர்.

நாளை(21ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மலை ரயில் நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல், தோட்டக்கலை, சுற்றுலா கழகம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான கூழல் சுற்றுலா என, அனைத்து சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் நுழைவாயில் முன் பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என, அறிவிப்பு போர்டு வைத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்த வியாபாரிகள் கடைகளை திறந்திருந்தாலும் வியாபாரமின்றி காணப்பட்டனர்.

சுற்றுலா ஸ்தலத்திற்கு முன்பாக, வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் சிலர் தற்காலிக கடைகளை காலி செய்தனர். சிலர் குறைந்தளவிலான பொருட்களை வைத்து கடைகளை திறந்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே