கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 10 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது.
வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார்.
வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இந்த முடக்கம் ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கும்.
அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்திலும் கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தாக்கிவிடும் என்ற அச்சத்தால் இன்று மாலை 6 மணி முதல் டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதே போல், திருச்சி மாவட்டத்தில் மாலையில் இருந்து டீ கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.