இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் நேற்று (ஆக.7) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், நேற்று (ஆக., 06) இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4: 30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர்.

அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கனமழை காரணமாக, மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரயவராய் பாலம் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் 1 முதல் பருவமழை துவங்கியதை தொடர்ந்து, மழை தொடர்பான சம்பவங்களில், இதுவரை கேரளாவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

இதனிடையே வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதையடுத்து கேரளாவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே