டெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்

கொரோனா சர்ச்சையின் மையப்புள்ளியாக தப்லீக் ஜமாத் அமைப்பு மாற்றப்பட்டதன் பகீர் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகம் முழுவதிலும் சாதி மதம் பார்க்காமல் பரவி வருகிறது கொரோனா.

அப்படி இருக்கும்போது இந்தியாவில் கொரோனா பரவ தப்லீக் ஜமாத் அமைப்பை கை காட்டுவதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது டெல்லி தப்லீக் அலுவலகத்தில் இருந்தவர்கள் சிலருக்கு ஏதோ ஒரு வழியில் கொரோனா தொற்று இருந்துள்ளது.

அவர்களைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக அங்கிருந்தவர்களை வெளியேற விடாமல் டெல்லி அரசும், மத்திய அரசும் பல முட்டுக்கட்டைகளை போட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

டெல்லி அரசு மற்றும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகமும் மெத்தனமாக செயல்பட்டதால் மேலும் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதோடு உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

உயிரிழப்புகளுக்கு மத்திய அரசை குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக வழக்கமான இரண்டாம் தர அரசியலைக் கையிலெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் முழு பின்னணியை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

மார்ச் 22-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த உடனேயே தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது தப்லீக் ஜமாத்.

ஆனால் மார்ச் 21ம் தேதி இரவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு என்பதால் அன்றும் தப்லீக் அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல முடியவில்லை.

தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதனால் மேலும் சுமார் ஒன்பது நாட்கள் தப்லீக் அலுவலகத்திலேயே முடங்கக்கூடிய சூழ்நிலை இருந்த நிலையில், சுமார் 1500 பேர் கிடைத்த வாகனங்களில் 22ஆம் தேதி இரவே புறப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் வாகனங்கள் இல்லாததால் தொடர்ந்து அங்கேயே இருக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தப்லீக் நிர்வாகம் சார்பில் டெல்லி அரசை அணுகி தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்குமாறும், அதற்கான வாகனத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

வாகனங்களின் பதிவு எண், ஓட்டுநர்களின் விபரம் ஆகியவற்றையும் சேர்த்தே விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் தப்லீக் அலுவலகத்தில் இருந்து வெளியேற டெல்லி அரசும், காவல்துறையும் எந்த உதவியும் செய்து தரவில்லை.

இதனிடையே மருத்துவ குழுவினர் அங்கு வந்து சோதனைகள் நடத்தி சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுபோல் இரண்டு குழுக்களை அழைத்துச் சென்றுள்ளனர். அப்படி இருந்தும் எஞ்சியவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்கவில்லை.

தப்லீக் நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பம் செய்த வீடியோவை தவறாக சித்தரித்தும் செய்தி பரப்பினர்.

அதாவது தப்லீக் அலுவலகத்தில் யாரையும் தங்க வைக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியதாக திரித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.

மேலும், தப்லீக் அலுவகத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தாக்கி உயிரிழந்து விட்டதாகவும், பலருக்கு நூலை தொற்று ஏற்பட்டு விட்டதாகவும் ஆதாரமில்லாமல் செய்தி பரப்பினர்.

இதன் உச்சகட்டமாக கொரோனா ஜிஹாத் என்ற ஹாஷ்டாக்கையும் பயன்படுத்தி வடக்கத்திய ஊடகங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை கக்கின.

டெல்லி தப்லீக் அலுவலகத்தில் தங்கி இருந்தவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தராததோடு, மருத்துவ உதவிகளும் அளிக்காததே அங்கு சிலருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்திருக்கிறது.

வட இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் எப்படி அரசுகள் கைவிரித்ததோ; அதே போன்றே தப்லீக் அமைப்பிற்கும் உதவாமல் கை விரித்ததோடு தற்போது அவர்களையே பலிகிடாவாகவும் ஆக்கியுள்ளனர்.

இந்த மோசமான சூழலிலும் இந்த சம்பவத்தை மதக் கண்ணோட்டத்தோடு அணுகி ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்துவது வேதனையிலும் வேதனை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே