தமிழகத்திற்கு ஜூன் 15ஆம் தேதி முதல் கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அரசு

தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது மக்கள் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்துவதை புரிந்து கொண்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து தற்பொழுது மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு இலவசமாக ஒரு கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் 7.24 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ள நிலையில் மேலும் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே