தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..!!

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான கேள்விகளை எதிரிக்கட்சியினர் எழுப்பி வரும் நிலையில், அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் அதற்கு பதிலளித்து வருகின்றனர்.

இதனையடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழியவுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

மேலும், வருகிற 24-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கையும், 2021-2022-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் அவை முன் வைக்கப்பட இருக்கிறது. கடைசி நாளான 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்குத் தமிழக முதல்வர் பதிலுரை ஆற்றுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே