உடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கௌசல்யா.

இவர் தன்னுடன் படித்த உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், 2016, மார்ச் 13-ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் சங்கர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற கௌசல்யாவும் பலத்த காயமடைந்தார்.

இந்தக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனையும், ஸ்டீபன் தங்கராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து திருப்பூர் அமர்வு நீதிமன்றம் 2017-இல் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

தண்டனையை எதிர்த்து சின்னச்சாமி உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

வழக்கின் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைத்ததற்கும் அரசு தரப்பில் அதில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே