கேரளாவை அதிர வைத்துள்ள ஸ்வப்னா சுரேஷ்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..!

திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் வழியாக, ஐக்கிய அரபு நாடுகளின் (யு.ஏ.இ.,) தூதரகத்துக்கு வந்த உணவுப் பார்சலில், 30 கிலோ தங்கம் கடந்த 6ம் தேதி சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பார்சலைப் பெறுவதற்காகத் தூதரக கடிதத்துடன் வந்த சரித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் தொடர்புடைய கேரள ஐ.டி., துறை ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார்.

அவர் தனக்கு முன்ஜாமீன் கேட்டு, கேரள ஹைகோர்ட்டில் ஆன்லைன் மூலம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ‘இந்த வழக்கு விசாரணையில் அனைத்துத் துறைகளையும் ஈடுபடுத்தி வேகமாக விசாரணை நடத்த வேண்டும்’ என, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று கடிதம் எழுதினார். 

தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஸ்வப்னாவின் வீட்டுக்குப் போகும் அளவுக்கு நெருக்கமாக இருந்த பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ‘ஸ்வப்னா யார் என்று தனக்குத் தெரியாது’ என, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ஆனால், பினராயி விஜயனும் ஸ்வப்னாவும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பட்டியலிடத் துவங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளதாவது:

ஸ்வப்னா அரசு அதிகாரி அல்ல, ஐ.டி., துறையின் அதிகாரியும் அல்ல எனப் பினராயி விஜயன் கூறியிருந்தார். அது உண்மைதான், முதலமைச்சரின் துறையான சயின்ஸ் ஆர்ட் அண்ட் டெக்னாலஜி துறையின்கீழ் உள்ள, ஒரு நிறுவனத்தில் ஸ்வப்னா வேலை செய்துள்ளார்.

கடந்த ஜன., 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், திருவனந்தபுரம் ராவீஸ் லீலா ஹோட்டலில் நடந்த, ‘எட்ஜ் 20-20 ஸ்பேஸ் கான்கிளே’ நிகழ்ச்சி, ஸ்வப்னா தலைமையில் நடந்தது. மாநில அரசு நடத்திய இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஸ்வப்னாதான் அனுப்பினார்.

பிப்., 1ம் தேதி மாலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதும், ஒப்பந்த பத்திரம் வழங்கியதும் ஸ்வப்னாதான்.

இப்படி இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஸ்வப்னாவைத் தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் எப்படிக் கூறமுடியும். ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இது நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக மாறியுள்ளது.

விண்வெளித்துறை சம்பந்தப்பட்ட ஐ.எஸ்.ஆர்.ஓ., போன்றவை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு கொடுக்க ஸ்வப்னா யார்? அவருக்கு தலைமை பொறுப்பு கொடுத்தது யார்.

எனவே, பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே