பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், அவரது மரணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோகர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுதவிர அவரது சில படங்கள் ரிலீசாகவில்லை. இதுவே அவர் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருக்கும். அவர்கள் திட்டமிட்டு சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.