மீண்டும் இணையும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படக்குழு

இயக்குநர் ஆர்.டி.எம் இயக்கத்தில் மீண்டும் சுரேஷ் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆர்.டி.எம் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. நவம்பர் 27-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிமாறன் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை வெளியிட்டார்கள்.

தற்போது ஆர்.டி.எம் – சுரேஷ் ரவி கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் அல்லது ஜூலை படப்பிடிப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் விஷ்ணுஸ்ரீ, எடிட்டர் பொன்ராஜ் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தில் சுரேஷ் ரவி காவல்துறையில் பணிபுரிபவராக நடிக்கவுள்ளார். ஆர்.டி.எம் – சுரேஷ் ரவி கூட்டணி இணைப்பில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். ஏனென்றால், இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்த ‘அதிமேதாவிகள்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே