சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
முஸ்லிம் பெண்களுக்கு மசூதிகளில் அனுமதி மறுப்பு, தங்கள் பிரிவை சேராதவர்களை திருமணம் செய்த பார்சி பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இவ்வழக்கில் இணைத்து விசாரிக்க கோரப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று காலை விசாரணை நடைபெற்றது.
அப்போது, சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அறிவித்தார்.
மேலும், சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா? என்ற கேள்வியை மட்டும் தனியாக விசாரிக்கப் போவதில்லை என்றும்; கோவில், மசூதி உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்களிலும், தங்குதடையின்றி பெண்களை அனுமதிப்பது, வழிபாட்டு முறை சார்ந்த விஷயமா? என்பது பற்றி விசாரிக்கப் போவதாகவும், உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கூறியிருக்கிறது.
குறிப்பாக, 5 நீதிபதிகள் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவையில்லாத வாதங்களை கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை அழைத்து, வருகிற 17ஆம் தேதி, உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அப்போது, யார், யார் என்னென்ன வாதாடப் போகிறார்கள் என்பதையும், எவ்வளவு நேரம் வாதாடப் போகிறார்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சபரிமலை வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஆணையிட்டனர்.