இளம் நடிகர் தற்கொலை: ஏன் அதற்குள் போயிட்டீங்கனு திரையுலகினர் அதிர்ச்சி….

கர்நாடாக மாநிலம் மாண்டியாவை சேர்ந்தவர் சுஷீல் கவுடா. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் கன்னட தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். மாடலாகவும் இருந்த சுஷீல் கவுடா ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் இருந்தார்.
கன்னட படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த சுஷீல் கவுடாவுக்கு துனியா விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் ரிலீஸாகாத துனியா விஜய்யின் சலாகா படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் சுஷீல் கவுடா. கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தன் சொந்த ஊரில் இருந்து வந்தார் சுஷீல்.

இந்நிலையில் சுஷீல் நேற்று தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கிற விபரம் இதுவரை வெளியாகவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த கன்னட திரையுலகினர், சின்னத்திரையை சேர்ந்த கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுஷீல் ஆசைப்பட்டது போன்று பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நேரத்தில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று நண்பர்கள் வியக்கிறார்கள்.

சுஷீலை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சலாகா படத்தை இயக்கி, நடித்து வரும் துனியா விஜய் சுஷீல் குறித்து அறிந்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
சுஷீல் கவுடா பற்றி துனியா விஜய் கூறியிருப்பதாவது,

நான் சுஷீலை முதல் முறை பார்த்தபோது அவர் ஹீரோ மெட்டீரியல் என்று நினைத்தேன். படம் ரிலீஸாவதற்குள் அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை தீர்வு அல்ல. இந்த ஆண்டு தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும் போன்று. கொரோனா வைரஸால் மட்டும் அல்ல. மக்கள் வேலை இழந்து கொண்டிருக்கிறார்கள். வாழ வழி தெரியாமல் பயப்படுகிறார்கள். இது போன்ற நேரத்தில் தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சுஷீல் கவுடாவுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடரில் நடித்த அமிதா ரங்கநாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுஷீல் பற்றி அமிதா கூறியிருப்பதாவது,

என் நண்பர் ஒருவர் தான் சுஷீல் பற்றிய தகவலை தெரிவித்தார். சுஷீல் இறந்துவிட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. சுஷீலுக்கு கோபமே வராது. அவர் ரொம்ப சாந்தமானவர், அன்பானவர். அவர் அதற்குள் சென்றுவிட்டார் என்பது கவலை அளிக்கிறது. திரைத்துறையில் நிறைய சாதிக்கத் தேவையான திறமை அவரிடம் இருந்தது என்றார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் மீண்டு வராத நிலையில் மற்றொரு நடிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திரைத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஏன் இப்படி பொறுமையை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே