மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்மணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

அதாவது கணவனை இழந்த 52 வயதான அப்பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் உள்ளார்.

இது குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மக்களவை எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்.

இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ ? என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே