திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சைதாப்பேட்டையில் கரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.8) காலை, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணிய கோயில் தெரு, பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் கரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெருவில் உள்ள பால் கடை, வி.எஸ்.முதலி தெருவில் உள்ள மளிகைக் கடை ஆகிய இடங்களுக்குச் சென்ற ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்கிறதா, அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து விசாரித்தறிந்தார்.
மேலும், அங்கிருந்த பொதுமக்களிடம், பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், பொருட்களின் விலையேற்றம் குறித்தும் விசாரித்து அறிந்தார்.
பின்னர், சுப்ரமணிய கோயில் தெரு, பஜார் ரோடு பகுதியில், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் மூலம் அவர்களது வீடுகளில் வழங்கிட, அதன் மாநிலத் தலைவர் தீபக்கிடம் ஒப்படைத்தார்.