ஆன்லைன் வகுப்பால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

ஆன்லைன் வகுப்பில் படிக்கவில்லை என்றால் உன்னால் எப்படி இந்த மூன்று மாதங்களில் படித்து தேர்ச்சி பெற முடியும் என தன்னுடைய ஆசிரியர்கள் அவநம்பிக்கையுடன் பேசியதாக கூறி தனியார் பள்ளியில் படித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் காமராஜ் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரவீன் (16). கொளத்தூர் தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார்.

ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே வீட்டுப்பாடம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே வீட்டு வேலைக்கு சென்ற அவரது தாயார் வீடு திரும்பி பார்த்த போது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.

அதனைத்தொடர்ந்து பெற்றோர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தேர்வுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் தேர்விற்கு தயாராக ஆசிரியர்கள் உதவுவார்கள் என நினைத்து பள்ளி சென்றேன்.

ஆனால் ஆசிரியர்களோ ஊரடங்கில் நன்றாக படித்திருந்தால் மட்டுமே தற்போது படிக்க இயலும் எனக் கூறியது எனக்கு பயத்தை உண்டாக்கியது.

11 ,12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே கல்லூரியில் சேர்ந்து படிக்க இயலும்.

பிகாம் படிக்க வேண்டும் என்பது இனி முடியாது போல . அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே