பங்குச் சந்தை கடும் சரிவு…

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், இதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிர்மறையாக எதிரொலித்தது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதார வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் வருவாய்களுக்கு மேலும் அழுத்தம் ஏற்படும்.

மேலும், பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

இதன் காரணமாக சந்தையில் லாபத்தை பதிவு செய்யும் நோக்கில் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர்.

இதனால், பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது.

சென்செக்ஸ் காலையில் 36.10 புள்ளிகள் கூடுதலுடன் 31,195.72-இல் தொடங்கியது. அதுவே அதிகபட்சமாகவும் இருந்தது. அதன் பிறகு சரிவைச் சந்தித்தது. 

ஒருகட்டத்தில் 30,474.15 புள்ளிகள் வரை இறங்கியது.

இறுதியில் 469.60 புள்ளிகள் சரிவுடன் 30,690.02-இல் நிலைபெற்றது.

நிஃப்டி சுமார் 6 புள்ளிகள் குறைந்து 9,103.02-இல் தொடங்கி அதிகபட்சமாக 9,112.05 வரை சென்றது.

குறைந்தபட்சமாக 8,912.40 வரை சரிந்தது. இறுதியில் 118.05 புள்ளிகள் குறைந்து 8,993.83 இல் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் மெட்டல், பார்மா தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ரியால்ட்டி குறியீடு அதிக அளவாக 4.87 சதவீதம் சரிவைக் கண்டது.

தனியார் வங்கி, ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், மீடியா, ஐடி, எஃப்எம்சிஜி, ஃபைனான்சியல் சர்வீஸஸ் ஆகியவற்றின் குறியீடு 1 முதல் 3.30 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

நிஃப்டி ஸ்மால் கேப் குறியீடு 0.50 சதவீதம், நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.42 சதவீதம் சரிவடைந்தது.

வங்கிப் பங்குகள்அதிகம் விற்பனைக்கு வந்ததால், நிஃப்டி பேங்க் குறியீடு 2.15 சதவீதம் அடி வாங்கியது.

சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி 6.57 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

பார்தி ஏர்டெல், இண்டஸ் இந்த் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, ஏஷியன் பெயிண்ட், சன்பார்மா ஆகியவையும் ஏற்றம் பெற்றன.

ஆனால், பஜாஜ் ஃபைனான்ஸ் 10.87 சதவீதம் குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் முன்னிலை வகித்தது.

மேலும், எம் அண்ட் எம், டைடான், ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே