ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – மூன்றாம் ஆண்டு நினைவுதினம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 -ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 -ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களின் 3 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அ. குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகி பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் தூய பனிமய மாதா கோயில் அருகே உயிரிழந்தோரின் திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாம்தமிழர்கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலர் வேல்ராஜ் தலைமையில் மட்டக்கடையில் உயிரிழந்தோரின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதேபோல தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோரின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே