6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. 

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நிறைவு பெற்றது. இதில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர்.

என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 11 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 11 ஆயிரம் பேருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் 22,133 பேரில் 15,660 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும். பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு 5 முறை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை. அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே