அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளின் திருமணம் இன்று திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மகள் கார் ஏறி அமரும் வரை டி.டி.வி.தினகரன் குடைபிடித்தபடி நிற்கும் வீடியோ ‘மகளதிகாரம்’ என்ற அடைமொழியுடன் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தினகரனின் மகள் ஜெயஹரினி – தஞ்சாவூர் காங். முன்னாள் எம்.பி. துளசி வாண்டையாரின் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொரோனா பரவல், லாக்டவுன் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மணமகனின் தாத்தா துளசி வாண்டையார் காலமானதாலும் தள்ளிப் போனது.
சசிகலா தலைமையில்…
இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் ஜெயஹரினி- ராமநாதன்திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு சசிகலா தலைமை தாங்கினார். முன்னதாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கல்யான சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருமணம் நடத்த அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது.
சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்பு
இந்த திருமண விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் அதிமுகவினர் 2 நாட்களாக திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். மேலும் சசிகலா, இளவரசி உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் மண்டபம் முழுவதும் நிறைந்து காணப்பட்டனர். நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றது. இன்று காலை சசிகலா தலைமையில் திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
ட்விட்டரில் டிரெண்டிங்
தினகரன் வீட்டு திருமணத்தால் திருவண்ணாமலை நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கியது. இத்திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் #நம்மவீட்டு_கல்யாணம் என்ற ஹேஷ்டேக்குடன் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. தினகரன் மகள் திருமண விழா படங்கள் அதிக அளவு பகிரப்பட்டும் வருகின்றன.
மகளதிகாரம் வீடியோ
மேலும் மகளதிகாரம் என்ற அடைமொழியுடன் ஒரு வீடியோவும் அதிக அளவு வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. அந்த வீடியோவில், மகள் ஜெயஹரினிக்கு தினகரன் குடைபிடித்து வருகிறார்.. மகள் காரில் ஏறிய பின்னரும் குடையை மடக்காமல் கார் கதவு அருகேயே தினகரன் நின்று கொண்டிருக்கிறார். ஓட்டுநர் வந்து சொன்ன பிறகு கார் கதவை மூடும் தினகரன் அப்போதும் குடையை மடக்காமல் ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.. இந்த சில நிமிட வீடியோ காட்சியைத்தான் மகளதிகாரம் என்ற பெயரில் அவரது ஆதரவாளர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.