கர்நாடகாவில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க வேரியண்ட் கொரோனா வைரஸ்

இந்தியாவில் முதல் முறையாக பிப்ரவரி மாத மத்தியில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் தொற்று இளம் வயதுடையோரை அதிக அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் தென் ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்று முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இதுவரை 29 பேருக்கு இங்கிலாந்து வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தடைந்த 58 வயது ஆண் ஒருவருக்கு தென் ஆப்பிரிக்க வகையைச் சேர்ந்த கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை சிவமோகாவில் அரசு தனிமை முகாமில் கண்காணிப்பில் வைத்துள்ளது சுகாதாரத்துறை. அவரின் நெருங்கிய தொடர்புகள் 8 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதுவரை இங்கிலாந்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்த சர்வதேச விமான பயணிகள் 64 பேர் மற்றும் அவர்களின் தொடர்புகளில் 29 பேருக்கு இங்கிலாந்து வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக பிப்ரவரி மாத மத்தியில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் தொற்று இளம் வயதுடையோரை அதிக அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை மேற்குவங்காளம், குஜராத் (சூரத்) மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தென் ஆப்பிரிக்க வகை தொற்று இதற்கு முன்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது கர்நாடகாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான Pfizer கடந்த மாதம் தங்களின் சோதனைக்கூட ஆய்வின் மூலம், தங்களின் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் ஆண்டிபாடி பாதுகாப்பினை தென் ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்று மூன்றில் இரண்டு பங்கை குறைத்துவிடும் என தெரியவந்திருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே