நுரையீரல் தொற்று காரணமாக தில்லியிலிருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் கோவாவிற்கு வந்து சேர்ந்தார்.

நாள்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு தில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

காற்று மாசு அதிகரித்து வருவதால் தில்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகன் ராகுல்காந்தியுடன் தில்லியிலிருந்து புறப்பட்டு கோவாவிற்கு சோனியா காந்தி வெள்ளிக்கிழமை மாலை வந்து சேர்ந்தார்.

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் சோனியா காந்திக்கு ஆஸ்துமாவும் அதிகரித்துள்ளது.

சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கும் சென்றார். அவருடன் ராகுல்காந்தியும் சென்றிருந்தார்.

இதனால் செப்டம்பர் 14 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோனியாகாந்தி கோவாவில் சில நாள்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே